Sunday 11 August 2013

அவனல்ல ....அவளுமல்ல ... மனுஷி !

                                   

                                                                                     அரவாணிகள் கடவுளின் வடிவம் .....அர்த்தநாதீஸ்வரர் என்ற கடவுளின் வடிவமே ஆண்டாண்டு காலமாய் "அரவாணி "களின் அடையாளம் என்பதை மறுக்க முடியாது . இது ஏதோ கொச்சைபடுத்துவதை யாரும் நினைக்கவேண்டாம்.
                                              மகாபாரதத்தில் "களப்பலி" ஆகும் முன்பு அரவான் "தான் திருமணமாகாமல் இறந்தால் நரகத்துக்கு போவேன் ஆகையால் நான் இறக்கும் முன்பு திருமணம் முடிக்கவேண்டும் அதற்கு ஒரு வரம் வேண்டும்" என்று கிருஷ்ணனிடம் வேண்டி பெற்றான் . நாளை சாகப்போகும் ( பலியாளுக்கு )அரவானுக்கு யார் பெண் கொடுப்பார்கள் ? கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து கொள்கிறான் .அரவானை ( கூத்தாண்டவர் ) திருமணம் செய்துகொள்பவள் அரவாணி இப்படித்தான் அந்த புராணம் சொல்வதாக சொல்கிறார்கள் ! இதில் கூட ஆண் கடவுள் பெண்ணாக மாறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது .
                                                              அதுமட்டுமல்ல மகாபாரதத்தில் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காடாண்ட போது அதில் ஓராண்டுகாலம் மாறுவேடத்தில் வாழவேண்டும் என்ற கட்டளையில் அர்ஜுனன் தேவலோக கன்னியின் சாபத்தை நிறைவேற்றும் விதமாக ஆணுமல்லாத பெண்ணாக விராட மன்னனின் மகளுக்கு நாட்டியக்காரியாக வாழ்ந்தாள் என்றும் பதிவு செய்யப்பட்டிருகிறது.
                              அர்த்தநாதீஸ்வரர்..அர்ஜுனன் . அரவாணிகளின் அடையாளம் ! இவைகளெல்லாம் புராணங்களில் ,இதிகாசங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு போற்றி பாராட்டப்பட்டாலும் அவைகளெல்லாம் கடவுளுக்கேயன்றி அரவாணிகளுக்கல்ல..என்பதுதான் யதார்த்தம் !...
அரவாணிகள் இன்று நேற்றல்ல ...மனிதன் தோன்றியதிலிருந்து ஆண்பால் - பெண் பால் - மூன்றாம்பால் ( அரவாணிகள் ) என்ற மனித பரிணாமம் பெற்று இருக்கிறது.இதில் அரவாணிகள் அவமானத்தின் சின்னங்களாக்கப்பட்டு அடியோடு மூடி மறைக்கப்பட்டு இருகிறார்கள் .
பிறக்கும்போது அரவாணிகளாக யாரும் பிறப்பதில்லை ! ஆணாக பிரசவிக்கப்படவர்களை அரவாணிகளாக மாற்றியது எப்படி ?எது ? யார் ? இந்த கேள்விகளையெல்லாம் ஒரு முறையெயாகினும் மனதளவிலாவது கேட்டுபார்த்ததுண்டா ?
                                           கண்ணே மணியே என்றெல்லாம் கொஞ்சி குலாவிய பெற்றெடுத்த தாய் முதல்எதிரியாக மாறிப்போவது மிருகங்களில் கூட இல்லையே ? தனக்கான ஆண் வாரிசு என்றதுமே வாரி அணைத்துகொண்ட தந்தையும் தன் மகன் என்று சொல்லக்கூட வாய் கூசும் கையறும் நிலை எவருக்கேனும் ஏற்பட்டதுண்டா ?
                                                       உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் மெள்ள ... மெள்ள மாற்றமடையும் வளரிளம் பருவம் அவர்களின் எதிர்காலம் இங்கில்லை என்றுரைக்கும் என்பதை எவரேனும் எதிர்பாத்திருப்பார்களா ? தாயால் ,தந்தையால் ,தமையனால் ,தமக்கையால் ,உற்றார் ,உறவினரால் " பொட்டை " என்று புதுபெயரிட்டு துரத்தியடிக்கப்பட்டவர்கள்தான் கடவுளின் அவதாரமென்றால் அந்த அடையாளத்தை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
                        அடையாளப்படுத்தப்பட்ட ஆண் அவையமும் ,ஆட்கொண்டுவிட்ட பெண்மையும் அவர்களை அலைகழிக்கின்றபோது ........ அவனா ? அவளா ? என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லை ! அவனல்ல .."அவள்தான் " என்று அவர்களின் உடல்தான் தீர்மானிக்கிறது என்ற உடலியல் உண்மை யாருக்குத்தெரியும் ?
                       மாற்றமடையாத ஆண் குரலும் , மழிக்கமுடியாத ரோமங்களும் முற்றுபெறாத வளர் சிதை மாற்றத்தை அவளால் என்ன செய்யமுடியும் ? சம்மந்தமில்லாமல் போன சமூகத்தின் உறவுகளோடு, ,ஆண் அடையாளத்தையும் அறுத்தெரிகிறாள்.
                                       ஒரு ஆணுக்கு பொட்டும் , பூவும், புடவையும் நடிப்பதற்கு வேண்டுமானால் பயன்படலாம் . வாழ் நாளெல்லாம் அணிய வேண்டுமென்றால் ஒப்புக்குக்கூட உள்வாங்க முடியுமா ? அரவாணி ஆணல்ல...ஆகாயத்திலிருந்து ஆண்டவனால்அனுப்பிவைக்கப்பட்டவளல்ல .. பெண்ணால் பிரசவிக்கப்பட்ட ஆண்மையை அழித்தொழித்த பெண்மை ..... பெண் ! இதை பெண்ணே ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்.
                               பெண் புறக்கணிப்பதும் ,ஆண் ஆடைகளைந்து அவமதிப்பதும் ,மிருககாட்சி மிருகங்களைவிடவும் கீழ்த்தரமான சீண்டலை இந்த சமூகம் சீண்டும்போது அவர்களால் வார்த்தைகளை அளந்து பேசமுடியவில்லை !
                                               அரவாணிகள் அவதரித்தவர்களல்ல ..... மகமறியாத அவர்கள் நம்மவர்கள் இல்லைஎன்று சொல்லிவிடலாம் ! நாளை உங்களுக்கோ ? உங்கள் மகனுக்கோ .மகளுக்கோ பிறக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?
                                       
அரவானிகளுக்கும் உடலும் ,உயிரும் இருக்கிறது .அந்த உயிருக்கும் உணர்வும் ,ஆசைகளையும் ,கனவுகளை சுமக்கும் மனது இருக்கிறது.அவர்களை புரிந்துகொள்ள அவர்களாகவே மனதால் நாமும் வாழ்ந்துபார்க்கவேண்டும்

No comments:

Post a Comment