Thursday 1 October 2015

தலைக்கவசம்....?,

தலைக்கவசம் அணிவது தொடர்பாக ..
போராடிய மதுரை கிளை வழக்குரைஞர்கள்
சங்கத்தலைவர் .பி.தர்மராஜ் , செயலாலர் .
ஏகே.ராமசாமி மீது நீதி மன்ற அவமதிப்பு
வழக்கு ..!
--------------------------------------------------

பொதுவாக இந்த பிரச்சனையை அணுகினால்
சட்டத்தை நிலை நாட்டக்கூடிய வழக்குரைஞர்களே
இப்படி போராடலாமா..?

மேதமை பொருந்திய நீதிபதிகளையும் , நீதிமன்ற
தீர்ப்பின் மீதும். வழக்குரைஞர்களே  விமர்சனம் வைக்கலாமா ...?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் ,
அதற்கு வழக்கறிஞர்கள் விதிவிலக்கா...?

வழக்கு விசாரணையை வெளிப்படைத்தன்மையில்
உலகமே பார்க்கும் வகையில் ஊடக துணையோடு விசாரணை நடத்தியது சரியானதுதானே...?

இப்படிப்பட்ட கேள்விகள் உலகம் முழுவதும்
பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு எழுந்தது ....!

ஆனால் ...
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ,
கீழ் கண்ட கேள்விக்கான விடை தெரியாமல்       மக்கள் மனம் குழம்பியும் கிடக்கிறது ....!

1)  வழக்குரைஞர்களும் இந்திய நாட்டின்
குடிமக்களாக இருக்கும் போது எழுத்துரிமை,
பேச்சுரிமை ,போராடும் உரிமை என்று இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள அந்த உரிமைகள்
பொருந்தாதா ....?

2) நீதிபதிகள் மேன்மை பொருந்தியவர்கள் என்பதிலோ , நீதியை நிலை நாட்டுவர்கள் என்பதிலோ எந்த மாற்று கருத்துமில்லை .
ஆனால் தமிழக முதல்வரின் சொத்துகுவிப்பு
வழக்கில் நீதிபதி.குமாரசாமி அவர்கள்
வழங்கிய தீர்ப்பும்,

காஞ்சிமடத்தில் படுகொலை செய்யப்பட்ட
சங்கர ராமன் கொலை வழக்கில் வழங்கிய தீர்ப்பும் ,
இன்றளவில் வியப்பிற்கும் , விவாதத்திற்கு ,
விமர்சனத்துக்கு உள்ளாக்கும் வகையில் இருக்கும் போது எல்லோரும் வாயை மூடிக்கொண்டு
மேல் முறையீடுதான் செய்ய வேண்டும் என்று
சொல்வது பேச்சுரிமையை மறுத்ததோடு ,
நீதிபதிகள் சொல்வது  கடவுளின் வாக்கு என்று
கொள்ளமுடியுமா ...?

கடவுள்கள் உருவாக்கியதாக சொல்லப்படும்
வேதங்களையும் , மத நூல்களையும்  விஞ்ஞான
பார்வையில் விவாதித்து கருத்து சொல்லும்
21 ஆம் நூற்றாண்டில் நீதிபதிகளின் தீர்ப்பை
விவாதிக்க கூடாது என்பதும் ,விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டது என்பதும் எப்படி பொருள் கொள்வது ?

3) தலைக்கவசம் அவசியம் அணியவேண்டும்
என்பதிலோ , மக்களின் பாதுகாப்பு குறித்து
நீதிமன்றம் கவலையோடு பார்ப்பது குறித்தோ,
அது குறித்து ஆணையிடுவதிலோ,
எந்தவிதமாற்றுக்கருத்துமில்லை. ஆனால்
உடனடியாக அமலாக்க இயலாத , வாகனத்தில்
பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிய
வேண்டும் என்று சாத்தியமில்லாத வகையில்  நிர்பந்தப்படுத்தி ஆணையிட்டதே விவாதத்தை ஏற்படுத்தியது என்பது மறுப்பதற்கில்லையே ...?

4) சட்ட விசாரணையை வெளிப்படையாக
உலகம் அறியும் படி ஊடகத்தை பயன்படுத்தி
வெளியிட்டது உண்மையிலே வரவேற்க தக்க
புதுமை போல தெரிந்தாலும் , பாலியல் தொடர்பான
வழக்குகளில் , தீவிரவாத ,பயங்கரவாத வழக்குகளில் இப்படிப்பட்ட நடைமுறையை பின்பற்ற
இயலுமா ...?

5) சென்னை உயர்நீதி மன்றத்தின் ஒரு கிளைதான்
மதுரை உயர்நீதிமன்ற கிளையும் , அதன் பார் கவுன்சில் அமைப்பும் என்பதும் அனைவரும்
அறிந்த விடயம். அதில் குறையேற்படுமாயின்
அதை மேன்மை பொருந்திய நீதிமான்கள் சரி
செய்து நடத்துவார்கள் என்ற நம்பிக்கையிலே
இந்த வழக்கை மக்கள் பார்க்கிறார்கள் . ஆனால்
கால வரையறையின்றி மூடிவிடலாம் என்று
ஆணையிட்டால் ...? ஏழை எளிய மக்களின்
சுமையை எவர் தங்குவார்கள் ...?

6) தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்
என்பதைப்போல நாடுமுழுவதும் உள்ள காவல்துறை லாக்கப் கொலைகளையும் , முறையற்ற என்கவுண்டர் கொலைகளையும் செய்து சட்டத்தை
தன் கையில் எடுக்கும்போது ....நீதியை காப்பாற்ற
போராடும் வழக்குரைஞர்களும், நீதியை நிலை
நாட்டும் நீதிமான்களும் விவாதப்பொருளாக
மாறலாமா ...?

இவையாவும் விமர்சனம் அல்ல ....
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான
நீதித்துறை மீதுள்ள கரிசனம் பற்றியதே...!