Friday 30 August 2013

அரிதாரம்.....!



அழகு என்பது அரிதாரம் பூசுவதல்ல ....
அது அவர்களின் நிறைவுக்கு !

"அழகு "அவரவர் கண்களில் .....
அவரவர் கருத்துக்களில் இருக்கிறது !


"நிறம் " அழகென்றால் "மழை "?
"பெண்" அழகென்றால் "மகள் "?

"ஒலி " அழகென்றால் "தமிழ் " ?
"உருவம் "அழகென்றால் " காற்று " ?

நடிகைதான்  அழகென்றால் .. ".நீ "!


Tuesday 27 August 2013

அத்துமீறல்கள்...!




வெட்டப்பட்ட ஆடுகளைப்போல்
இங்கு எல்லாமே வியாபாரம்தான் !

கிழிக்கப்பட்ட சதை விற்பனையாகிறது,
அவள் சம்மதமில்லாமலே .!

அத்துமீறல்கள்....
அரங்கேற்றப்படுகிறது !

உடல் மீது அவர்களும் ,
உள்ளத்தை ஊடகங்களும்...!

சிந்திய ரத்தமும் ,துணியும்
சிறுத்தைகள் ஆராய்கின்றன '

முறத்தால் அடித்தவள் ...இன்னும்
முடிந்துபோகவில்லை !

வருவாள் ....உறுப்புகளற்ற அவள்
ஆயிரமாயிரமாய் ........!

Monday 26 August 2013

அவள் ...!




எடுத்தெறிந்து பேசுகிறாய் ....
யாரையும் ?

துணிந்து வாதிடுகிறாய் ....
யாருக்காவோ ?

அடங்கி போவதில்லை....
எங்கேயும் ?

அறுத்தெரிகிறாய் .....
ஆணாதிக்கத்தை ?

எத்தனை முறை கேட்டும்.....
என்னையும் சேர்த்து முடித்துவிட்டாய் ..

சொரனையற்ற "சமூகத்து"க்கென்று .....!

Sunday 18 August 2013

நட்பின் ஆழம் புரிதல் ......!



                                                               சில நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்போது இவர்களை போல நல்லவர்கள் நம் வாழ் நாளில் கிடைக்க மாட்டார் என்று எண்ணி பழகுகிறோம் ,ஆனால் அப்படிப்பட்டவர்களின் உறவு நீடிப்பதில்லை . ஏன் இப்படியெல்லாம் நமக்கு மட்டும் நடக்கிறது என்று பல நாட்கள் ...பல மணி நேரங்கள் யோசித்து பார்ப்பதுண்டு முடிவில் நாம் அவர்களோடும் ,அவர்கள் நம்மோடும் இணையாமலே போய்விடுகிறோம் . 
                                                        அப்படி பிரிந்து போகக்கூடியவர்கள் தான் அதற்கு காரணமாக இருகிறார்களா ? என்றால் அப்படி அவர்கள் பக்கம் மட்டுமே தள்ளிவிட முடியவில்லை ! ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லும்போது அவற்றை முழுமையாய் ஒதுக்கித்தள்ளவும் முடியவில்லை ! அதற்கு நாமும் பொறுப்பாளியாய் ஆகிறோம் , குறிப்பாய் நம்முடைய இயலாமையை ,வறுமையை , உடல் நலக்குறைவை வெளிப்படையாய் நம்மைப்பற்றி முழுமையாய் புரிந்து கொள்ளாதவர்களிடம் சொல்லிவிடுகிறோம் . அவர்கள் சமூக பொருளாதார நிலையோடு நம்மை ஒப்பிட்டு இப்படிப்பட்டவர்கள் நம்மோடு எப்படி ஈடுகொடுக்க முடியும் ? என்று தீர்மானித்துவிடுகிறார்கள் .
                                ஆகவே மன்னிப்புகூட புரிந்து கொள்ளக்கூடியவர்களிடம் மட்டுமே  கேட்க முடியும் ! புரிதல் இல்லாதவர்களிடம் மன்னிப்பு மட்டுமல்ல ...நட்பும் கேலிக்கூத்தாகிவிடும் ! நட்பின் ஆழம் புரிதல் ......நட்பின் மனதைத்தவிர எதையும் எதிர் பார்க்காத புரிதல் !

Saturday 17 August 2013

முகம் கிழிக்கும்....முகநூல் !


                             


இது கனவு உலகம் ! நிஜம் வேறு .......!
இதில் உங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் !
என்ற தங்களின் வழிகாட்டுதலையும் , வாழ்த்தினையும் , பெற்றதன் விளைவாக இணையத்தில் தனக்கான பாதையை வகுக்க முயற்சிக்கிறேன்.  
 இது புகழ்ச்சியல்ல ...மனம் திறந்த உண்மை ! 
                        உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் நண்பர்களாக கிடைத்து இருகிறார்கள் ...நட்பு என்றால் எதையும் எதிர்பார்த்து இணைவதல்ல ..
.என்பதை நிஜமாக்கவே முயல்கிறேன் .இன்றைய நுகர்வு கலாச்சாரம்  
 " உனக்காக ஓடு ! உனக்காக எதையும் மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள் !
பெண்ணென்றால்...... அவளை உடல் தேவைக்காய் எடுத்துக்கொள் அல்லது முயற்சி செய் ! ஆணென்றால் நட்பென்று ஒன்று இல்லை
.நாசுக்காய் பேசி எதையாவது அவர்களிடமிருந்து பிடிங்கிக்கொள் !
என்ற வக்கரத்தை வாழ் நிலையாய் திணித்துக்கொண்டிருக்கிறது ! இவற்றிலிருந்து தலை தப்பினாலும் ........,என் நட்பு வட்டத்தை தாண்டி  
புத்தி ஜீவிகளும் , நேர்மைவாதிகளும் , பெண்ணியவாதிகளும் போராடிவருகிறார்கள்  யாரையும் எதிர்பாக்காமல் என்று உணர்கின்றபோது...   ஓராயிரம் சுத்திகளால் என் கர்வம் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. 
முயன்று வருகிறேன் ....... நட்பு ...! நட்பாகவே இருக்கவும் . நாம் பிறருக்காக இருக்கவும் ...... முயன்று பார்ப்போம் ! !

நண்பர் .மகேந்திரனுக்கு.......நன்றி ! 

Tuesday 13 August 2013

தமிழ்ச்செல்வியின் . ".குமரி "



எழுத்தாளர். தமிழ்ச்செல்வி அவர்களுக்கு ! வணக்கம் !
                                                       " குமரி "நல்ல சிறுகதை சொல்லப்பட்டவிதம் மிக அருமை .எண்பதுகளில் எழுத்தாளர்.சு .சமுத்திரம் அவர்களின் "வாடாமல்லி " என்ற நாவல் முதன்முதலில் படிக்க வாய்ப்புகிடைத்தது .படித்து முடித்த பின்பு பலநாட்கள் என்னால் தூங்க முடியவில்லை . அப்போழுதான் அரவாணிகளை பற்றிய என் கண்ணோட்டம் எவ்வளவு மோசமானதாகவும் ,கேவலமான புரிதலும் இருந்தது என்பதை நினைத்து வேதனைப்பட்டேன் .
                                                                         அதன்பிறகு அரவாணிகள் ( மனிக்கவும் இப்பொழுதான் திருநங்கை என்று குறிப்பிடுகிறோம் ) சம்மந்தமாக நிறைய தேடுதல் எப்பொழுது மனித சமூகம் தோன்றியதோ அப்பொழுதே ...ஆண் --பெண் ---அரவாணிகள் என மூன்றாம் இனமும் தோன்றி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன் .மகாபாரதத்தில் விராடபருவத்தில் அக்கியாதவாசத்தில் ஓர் ஆண்டுகாலம் அர்ஜுனன் அரவாணியாக வாழ்க்கை நடத்துவதும் ,அரவானுக்கு மனைவியாக மாறும் கிருஷ்ணன் அரவாணியாகமாறி திருமணம் செய்த அன்றே தாலி அறுப்பு நிகழ்வும் செவி வழி இலக்கியம் எழுத்துவடிவில் மகாபாரதமாக பரிணமித்த பின்னும் அதில் பதிவு செய்யபட்டிருக்கிறது . இது அரவாணிகள் பற்றிய அரிச்சுவடி துவக்கம் என்றாலும் ,அரவாணிகளின் நடப்பு அவர்களின் பிறப்பு .எப்படி ?. எங்கு ? தேடினேன் ........... எங்கோ நகரத்தில் ,பெருந்துகளில் ,சந்தைகளில் ,இரவு நேர கைதட்டல்களில் அவர்களை என்னால் மறக்க முடியவில்லை 
                                                            . ஏன்னென்றால் வளரிளம் பருவத்தில் இருக்கும் என் பையன் அரவாணியாக மாறமாட்டான் என்பது என்ன நிச்சயம் ? தன் மனைவியிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியவில்லை . இதுபற்றி... யாராவது இவர்கள் பற்றி எழுத மாட்டார்களா ? என்ற தேடுதலில் இருந்த பொழுதுதான் அரவாணிகள் பற்றி எழுத்தாளர் .அ .பிரேமா அவர்கள் நேரடி உரையாடல் கொண்ட சிறு பிரசுரம் வெளி வந்தது .அதில் ஆணாக பிரசவித்த அந்த ஜீவன் குரோமோசோம்கலின் மாற்றம் அவர்களின் அங்கத்தில் உள்ளதைக்கூட அகற்ற துடிக்கும் கொடுமையும் ,அவர்கள்உயிர் படும் அவஸ்த்தையும் பதிவு செய்யப்பட்டிருந்தது . 
                                                       அதன் பிறகு முற்போக்கு எழுத்தாளர்களின் சந்திப்பு எங்கள் ஊரில் நடந்தது ,அவர்களிடம் " என்னால் எழுத முடியாது நீங்கள் நிறைய இலக்கியங்களை கொடுக்கிறீர்கள் ,சாகித்திய அகாதமி விருதுகள் கூட பெறுகிறீகள் அரவாணிகள் பற்றி எழுதுங்கள் என்று கேட்டேன். இன்னும் ஒருபடி மேலே போய் தீண்டாமை பற்றியும் அதை போக்க போராடுவதாகவும் சொல்கிறிர்கள் ,உண்மையான தீண்டாமை அரவானிகள்தான் என்றேன் . ஒரு தாயே தான் பெற்ற பிள்ளையை தீண்ட மறுப்பது .....இந்த கொடுமை எங்கேனும் பார்த்ததில்லை என்றெல்லாம் சொன்னேன் .என் முயற்சிகளெல்லாம் வீணாகிபோனது . 
                                         பிச்சைகாரனுக்குகூட அவ்வளவு எளிதில் பிச்சை போடா மறுப்பேன் .ஆனால் எங்கேனும் கைதட்டல் கேட்டால் .........................? யாரோ ஒரு தாயின் ..தந்தையின் ...தன மகனை இழந்த அழு குரல் கேட்டுகொண்டே இருக்கிறது .அதனால் என் பாக்கெட்டில் இருக்கும் பணம் என்னையறியாமல் அவர்களின் கைகலில் திணித்து இருக்கேன் . ஒரு சராசரி மனிதனின் தவிப்பு ..அதற்க்கு உங்கள் சிறுகதை " குமரி " ஆறுதல் ! நன்றி ! !

    எழுத்தாளர் .தமிழ்ச்செல்வி எழுதிய " குமரி " சிறுகதைக்கு 27.1.2013 இல் எழுதிய விமர்சன கட்டுரை .

Sunday 11 August 2013

அவனல்ல ....அவளுமல்ல ... மனுஷி !

                                   

                                                                                     அரவாணிகள் கடவுளின் வடிவம் .....அர்த்தநாதீஸ்வரர் என்ற கடவுளின் வடிவமே ஆண்டாண்டு காலமாய் "அரவாணி "களின் அடையாளம் என்பதை மறுக்க முடியாது . இது ஏதோ கொச்சைபடுத்துவதை யாரும் நினைக்கவேண்டாம்.
                                              மகாபாரதத்தில் "களப்பலி" ஆகும் முன்பு அரவான் "தான் திருமணமாகாமல் இறந்தால் நரகத்துக்கு போவேன் ஆகையால் நான் இறக்கும் முன்பு திருமணம் முடிக்கவேண்டும் அதற்கு ஒரு வரம் வேண்டும்" என்று கிருஷ்ணனிடம் வேண்டி பெற்றான் . நாளை சாகப்போகும் ( பலியாளுக்கு )அரவானுக்கு யார் பெண் கொடுப்பார்கள் ? கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து கொள்கிறான் .அரவானை ( கூத்தாண்டவர் ) திருமணம் செய்துகொள்பவள் அரவாணி இப்படித்தான் அந்த புராணம் சொல்வதாக சொல்கிறார்கள் ! இதில் கூட ஆண் கடவுள் பெண்ணாக மாறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது .
                                                              அதுமட்டுமல்ல மகாபாரதத்தில் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காடாண்ட போது அதில் ஓராண்டுகாலம் மாறுவேடத்தில் வாழவேண்டும் என்ற கட்டளையில் அர்ஜுனன் தேவலோக கன்னியின் சாபத்தை நிறைவேற்றும் விதமாக ஆணுமல்லாத பெண்ணாக விராட மன்னனின் மகளுக்கு நாட்டியக்காரியாக வாழ்ந்தாள் என்றும் பதிவு செய்யப்பட்டிருகிறது.
                              அர்த்தநாதீஸ்வரர்..அர்ஜுனன் . அரவாணிகளின் அடையாளம் ! இவைகளெல்லாம் புராணங்களில் ,இதிகாசங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு போற்றி பாராட்டப்பட்டாலும் அவைகளெல்லாம் கடவுளுக்கேயன்றி அரவாணிகளுக்கல்ல..என்பதுதான் யதார்த்தம் !...
அரவாணிகள் இன்று நேற்றல்ல ...மனிதன் தோன்றியதிலிருந்து ஆண்பால் - பெண் பால் - மூன்றாம்பால் ( அரவாணிகள் ) என்ற மனித பரிணாமம் பெற்று இருக்கிறது.இதில் அரவாணிகள் அவமானத்தின் சின்னங்களாக்கப்பட்டு அடியோடு மூடி மறைக்கப்பட்டு இருகிறார்கள் .
பிறக்கும்போது அரவாணிகளாக யாரும் பிறப்பதில்லை ! ஆணாக பிரசவிக்கப்படவர்களை அரவாணிகளாக மாற்றியது எப்படி ?எது ? யார் ? இந்த கேள்விகளையெல்லாம் ஒரு முறையெயாகினும் மனதளவிலாவது கேட்டுபார்த்ததுண்டா ?
                                           கண்ணே மணியே என்றெல்லாம் கொஞ்சி குலாவிய பெற்றெடுத்த தாய் முதல்எதிரியாக மாறிப்போவது மிருகங்களில் கூட இல்லையே ? தனக்கான ஆண் வாரிசு என்றதுமே வாரி அணைத்துகொண்ட தந்தையும் தன் மகன் என்று சொல்லக்கூட வாய் கூசும் கையறும் நிலை எவருக்கேனும் ஏற்பட்டதுண்டா ?
                                                       உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் மெள்ள ... மெள்ள மாற்றமடையும் வளரிளம் பருவம் அவர்களின் எதிர்காலம் இங்கில்லை என்றுரைக்கும் என்பதை எவரேனும் எதிர்பாத்திருப்பார்களா ? தாயால் ,தந்தையால் ,தமையனால் ,தமக்கையால் ,உற்றார் ,உறவினரால் " பொட்டை " என்று புதுபெயரிட்டு துரத்தியடிக்கப்பட்டவர்கள்தான் கடவுளின் அவதாரமென்றால் அந்த அடையாளத்தை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
                        அடையாளப்படுத்தப்பட்ட ஆண் அவையமும் ,ஆட்கொண்டுவிட்ட பெண்மையும் அவர்களை அலைகழிக்கின்றபோது ........ அவனா ? அவளா ? என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லை ! அவனல்ல .."அவள்தான் " என்று அவர்களின் உடல்தான் தீர்மானிக்கிறது என்ற உடலியல் உண்மை யாருக்குத்தெரியும் ?
                       மாற்றமடையாத ஆண் குரலும் , மழிக்கமுடியாத ரோமங்களும் முற்றுபெறாத வளர் சிதை மாற்றத்தை அவளால் என்ன செய்யமுடியும் ? சம்மந்தமில்லாமல் போன சமூகத்தின் உறவுகளோடு, ,ஆண் அடையாளத்தையும் அறுத்தெரிகிறாள்.
                                       ஒரு ஆணுக்கு பொட்டும் , பூவும், புடவையும் நடிப்பதற்கு வேண்டுமானால் பயன்படலாம் . வாழ் நாளெல்லாம் அணிய வேண்டுமென்றால் ஒப்புக்குக்கூட உள்வாங்க முடியுமா ? அரவாணி ஆணல்ல...ஆகாயத்திலிருந்து ஆண்டவனால்அனுப்பிவைக்கப்பட்டவளல்ல .. பெண்ணால் பிரசவிக்கப்பட்ட ஆண்மையை அழித்தொழித்த பெண்மை ..... பெண் ! இதை பெண்ணே ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்.
                               பெண் புறக்கணிப்பதும் ,ஆண் ஆடைகளைந்து அவமதிப்பதும் ,மிருககாட்சி மிருகங்களைவிடவும் கீழ்த்தரமான சீண்டலை இந்த சமூகம் சீண்டும்போது அவர்களால் வார்த்தைகளை அளந்து பேசமுடியவில்லை !
                                               அரவாணிகள் அவதரித்தவர்களல்ல ..... மகமறியாத அவர்கள் நம்மவர்கள் இல்லைஎன்று சொல்லிவிடலாம் ! நாளை உங்களுக்கோ ? உங்கள் மகனுக்கோ .மகளுக்கோ பிறக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?
                                       
அரவானிகளுக்கும் உடலும் ,உயிரும் இருக்கிறது .அந்த உயிருக்கும் உணர்வும் ,ஆசைகளையும் ,கனவுகளை சுமக்கும் மனது இருக்கிறது.அவர்களை புரிந்துகொள்ள அவர்களாகவே மனதால் நாமும் வாழ்ந்துபார்க்கவேண்டும்

Saturday 10 August 2013

ஈழ விடுதலை ....!


                                                                                 சர்வதேசியம் ,தேசிய இன விடுதலை பேசுபவர்களே தமிழ அரசியல் ,இந்திய அரசியல் என்று இந்தியாவில் சுருங்கி சுருண்டு கிடக்கும்போது தமிழகமுதலாளித்துவ அரசியல்வாதிகள் அவர்களுக்கான அரசியல் செய்கிறார்கள் அது தமிழகத்தில் மொழி ,இலக்கியம் ,நாடகம் ,நடிப்பு என்று அவர்களுக்கான அரசியல் அதில் ஈழ விடுதலை என்பது வெறும் வெளி வேஷம் .அவர்களிடம் உலகளவில் மானுட விடுதலையையோ ? தேசிய இன விடுதலையையோ பேசுவதில் நம்மைத்தவிர வேறு முட்டாள்கள் உலகில் இருக்க மாட்டார்கள் .இருந்தாலும் பற்றியெரியும் நெருப்பை அணைக்க சாக்கடை நீரையும் பயன்படுத்துவது சாமர்த்தியம்தான் ஆனால் அதுவே எல்லாவற்றையும் சரி செய்யும் சரியான பாதையல்ல ! சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைதான் அதற்காக இந்திய பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகளிடம் மண்டியிடுவது முறையுமல்ல ...... சரியுமல்ல .........

.                                       இலங்கையில் இருக்கும் .வடகிழக்கு .. மலையக தமிழின மக்களின் ஒருங்கிணைப்பு .... அடுத்து தமிழ் தேசிய இனவிடுதலைக்கான தேவை உணர்ந்த ஜனநாயக (சிங்கள )சக்திகளின் ஆதரவு அதன் பிறகுதான் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இவைகள்தான் இன்றைய தேவை ! இவைகளை திரட்ட பேரினவாத ராஜபக்ஷே அரசை எதிர்த்த போராட்டத்தை ஒன்றுபட்ட ஜனநாயக சக்திகளை இணைத்த ஜனநாயக போராட்டமாக இலங்கையில் நடத்துவதற்கான முயற்சிகள் மட்டுமே சரியானது !

                             தமிழகத்தில் உள்ள தேசிய - மாநில கட்சிகளில் யார் தேசிய இன விடுதலையை ஏற்கிறார்களோ அவர்களின் வழியில்தான் தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டோர் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை நடத்த முடியும் ! இந்த புரிதல் இல்லாமல் புலம்புவதில் பலனில்லை .....




      

Friday 9 August 2013

நாய் வால் ....!



எங்கேபோய் சுற்றி வந்தாலும்
கடேசியில் ........

"அவள் " அதுக்குதான் ...!
என்று சிந்திக்கும் ...

நாய்வாலை மட்டும்
நிமிர்த்தவே முடியவில்லை !






படம் ; மணிவர்மா ..

தடம் ....!

உன்
தடமென்பதால் ...
வருகிறேன் !

நீ ..மனிதன் !
மனிதனைப்போல்....
இருக்கும் மனிதன் !



Tuesday 6 August 2013

பெண் விடுதலை கெஞ்சி பெறுவதல்ல ......!

                                                            

                                                 குடும்ப சிதைவுக்கு யார் காரணம் என்ற காரணம் தேடுகின்றனர். ஏன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே புரிந்து கொள்வதில்லை என்ற வாதம் வலுவாகிகொண்டிருகிறது . உண்மையோ வேறுவிதமானது ...... காதலித்தாலும் ,காதலிக்காவிட்டாலும் ஆண் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு நடக்கும் வரை எந்த பிரச்சனையும் பெண்ணுக்கு வருவதில்லை .ஒரு சில இடங்களில் பெண் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு நடக்கும்வரைஅந்த குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை...ஆனால் பெண் சொல்வதை கேட்பதாக தெரியவில்லை .ஆகவே சமூகத்தில் பெரும் பகுதி ஆணே ஆதிக்க சக்தியை இருகின்றான் . பெரும்பாலும் பெண்கள் ஆதிக்க சக்தியாய் இருப்பதில்லை .. ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம் .

                                                         இந்நிலையில் ஒரு பெண்ணை .ஆண் திருமணம் செய்துகொண்டு பெண் வீட்டோடு மருமகனை போவது சுயமரியாதை குறைவானதாகவும் ,பெண்தான் ஒரு ஆணை திருமணம் செய்துகொண்டு அவள் பிறந்த வீட்டைவிட்டு கணவன் வீட்டுக்கு வரவேண்டும் ! அப்படி வருவது மரபு என்றும் இந்த ஆணாதிக்கசமூகம் காலங்காலமாய் கற்பித்துள்ளது . அதனால் "அவள் " அவளாக இருக்க முடிவதில்லை .

                                                       ஒரு ஆணைப்போல் அவளும் அவளாகவே இருக்க முயலும்போது ஒடுக்கப்படுகிறாள் . அந்த ஒடுக்குமுறையிலிருந்து வெளியேற அத்தனை மரபுகளையும் உடைத்தெரிகிறாள் . அதை ஏற்கும் மன நிலையில் இன்றைய ஆணாதிக்கம் இல்லை . அதற்காகபெண் விடுதலை கெஞ்சி கேட்டு பெறுவதல்ல... .இவைகளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் பெண் விடுதலை என்பது வெற்றி பெற்றே தீரும் !

விமர்சனங்கள்........!


                               


                    .விமர்சனங்கள்....... வைரத்துக்கான பட்டைதீட்டலாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான் ! சில நேரங்களில் கண்ணாடிகளின் மீதும் விழுந்துவிடுகின்றன ! நாம் நேசிக்கும் நண்பர்கள் சமூக அழுக்குகளை தன் மீது சுமந்து வந்து சக நட்புக்கெல்லாம் சரியானவை என்று விற்கும்போது.............. விமர்சனத்தை முன்வைப்போரின் கோபம் தவிர்க்க முடியவில்லை ! 
                                           இன விடுதலை..... மனித நேயம் ..... பெண்ணிய பார்வை ....மதம் கடந்த நல்லிணக்கம் ....சுய மரியாதை..... தன்னொழுக்கம் என தன் நட்பிடம் தாம் எதிர்பார்த்த சமூக் அக்கறை இல்லையே ? என்றுணரும்போதும் ,இவைகயெல்லாம் கேளிகூத்தாக்கும்போதும் யோக்கியவானாக அல்ல .....அவர்களை யோசிக்க வைக்கவே விமர்சனகள் ஈட்டியகிவிடுகின்றன .                                                               எவ்வளவு மக்கட்டை வார்த்தைகளை போட்டாலும் வேகமாக வீசுவதால் வலித்துவிடுகிறது அவர்களுக்கு.... ! எப்படித்தான் கண்களை மூடிக்கொண்டு காதுகளை திறந்து வைத்தாலும் நாராசார வார்த்தைகளை எப்படி சகித்துக்கொள்ள முடியும் ? 
                                                உண்மைதான் நம்மீது அக்கறையுள்ள ,இதுநாள் வரை நம்மை நேசிக்கும் நட்பாயிற்றே ? என்று நினைக்கிறோம் ஆனால்.... அப்படி விட்டுவிடவும் முடியவில்லை ! தன் விரலேயானாலும் விழிகளில் படும்போது தடுக்கின்ற தன்னெழுற்சி தப்பாகுமா ? தப்பென்று நினைத்தால் அவர்களை தவறவிடுவதைத்தவிர வேறு வழி இல்லை !

Sunday 4 August 2013

காட்டுமிராண்டிகள் ........!


                தஞ்சை பெரிய கோவிலில் புத்தபிசுகளை சிலர் தாக்கியதை கண்டு மனவேதனை அடைந்தேன் ! ஒரு தப்புக்கு ....ஒருதப்பு சரியல்ல ! இதை முட்டாள்தனமென்றனர் சிலர் .. இது முட்டாள்தனமல்ல ..............காட்டு கூச்சல் போடும் காட்டுமிராண்டித்தனம் ! தன் சட்டையை தானே கிழித்துகொள்ளும் பைத்தியக்காரத்தனம்..!....

இந்த காட்டு மிராண்டிகளும் ,பைத்தியங்களுமா ? ஈழத்தமிழர்களின் உரிமையை பெற்றுத்தரப்போகிறார்கள் ? அது ஒன்றுமில்லை .............அதைவிட கூத்து புத்த பிச்சை அடிப்பதை தடுக்கும் இளைஞனை பார்த்து " நீயெல்லாம் ஒரு அப்பனுக்கு பொறந்தவனா ? " என்று கேட்கிறான் .அதையும் அந்த பைத்தியங்கள் பதிவு செய்திருகின்றனர் .இவையெல்லாம் அரசியலுக்கு , விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுமேயொழிய வேறு எந்த பயனுமில்லை !

                  இந்த காட்டுமிராண்டித்தனத்தை படித்தவர்களும் ,பண்பாளர்களும் கண்டிக்கின்றனர் .. பத்திரிக்கையாளர் மனுஷிய புத்திரனுக்கு என்ன ஆச்சு?..........அவரை நல்ல விபரம் தெரிந்தவராகத்தானே பார்க்கிறோம் ! ச்சே .. .என்ன முட்டாள்தனம் ? அவரா இப்படி .உதாரணத்துக்கு .ஒரு சென்னைகாரர் தன் உறவினரை கொன்றுவிட்டார் என்பதற்காக ...... சென்னைலிருந்து வரும் அத்துணை பேரும் மோசமானவர்கள் என்றோ ? கொலைகார்கள் என்றோ தண்டிக்க முடியுமா ? இவயெல்லாம் பார்க்கும்போது ... என்ன இவர்கள் பத்திரிக்கையாளர்களா ? என்று என்ன தோன்றுகிறதே !

                 ஒரு பத்திரிக்கையாளன் என்பவன் நிர்வாகி போன்றவன் , ஒரு பத்திரிக்கையாளன் அமைப்பாளனை போன்றவன் , ஒரு பத்திரிக்கையாளன் புரட்சியாளனைப்போன்றவன் ........என்னென்றால் அவனிடம் இந்த சமூகத்தின் முக தோற்றத்தையே மாற்றக்கூடிய வலிமையான எழுதுகோல் என்ற ஆய்தம் இருக்கிறது . அந்த ஆயுதத்தை பிடித்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படலாமா ? அப்படி இல்லையென்றால் இந்த சமூகத்தை பின்னோக்கி செல்லத்தான் அவரின் அறிவும் ,ஆற்றலும் பயன்படுகிறதா? படித்தவர்களே இப்படி புரிந்துகொண்டால் .....படிக்காதவர்களின் நிலை என்ன ?
 
"படித்தவன் வாதும் சூதும்செய்தல் போவான் ,போவான் ஐயோவென்று போவான் !" என்று மகாகவி .பாரதி சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகிறது !







காதல் நாடகமா ? அரசியல் நாடகமா ?

              "எது கிடைத்தாலும் அதை பயன்படுத்து ! என்ற தாரக மந்திரத்தைத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள் .அதில் பழைய ஆயுதம் ஊழல் ! புதிய ஆயுதம் காதல் !

                                         ஊழலையும் ,காதலையும் பொதுவாய் பார்த்தால் ஏதோ நியாயவாங்களின் நேர்மையான நீதி போதனை கதைகளைப்போல் தெரியும் ,ஆனால் உண்மை அதுவல்ல என்பது உற்றுநோக்குபவர்களுக்கே புரியும் ! " "எல்லா நதிகளும் கடலை நோக்கியே "என்பதைப்போல அரசியல் வாதிகளின் எல்லா செயல்பாடுகளும் வாக்குவங்கியைநோக்கியே இருந்துவருகிறது.

                                       ஒரு காலத்தில் தேசிய அரசியல் என்றால் மதமும் ,மாநில அரசியல் என்றால் இனமும் என்ற செயல்திட்டத்தை முன்வைத்து நடத்திய தேர்தல் பந்தயத்தில் அவர்களுக்கான முழு வெற்றியை பெறமுடியவில்லை என்பது உண்மை .ஆனால் மத அரசியலும் ,இன அரசியலும் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாவிட்டாலும் ,முற்றிலும் தோல்வியடையவில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை .இந்நிலையில்தான் தன்னுடைய செயல் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் .

                             தேசிய அரசியலில் "ஊழலற்ற நிர்வாகம் "என்ற கொஷமும் , மாநிலத்தில் இனமல்ல ,மொழியல்ல..... ஜாதி ! அதை பாதுகாப்போம் என்று சொல்லி சரித்திரத்தை தோண்டியெடுத்து தூக்கிலிடுகிறார்கள் !

                                         

அரேபியர்கள் ...இந்தியரல்ல ..!

                                                     
                   

                                                                        அரபு நாடுகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளை சில நண்பர்கள் பதிவு செய்கிறார்கள் அதை பார்த்து .மனம் சங்கடப்பட்டது .மிக்க வேதனை அடைந்தேன் . அவர்கள் இந்த காட்சியை எதற்காக பகிர்ந்தீர்கள் என்று எனக்கு புரியவில்லை . இதை விடவும் கொடுமையாக மரணதண்டனை ஒரு பெண் விபச்சாரம் செய்தாள் என்பதற்காக அவளை உயிரோடு கழுத்து மட்டம் வரை புதைக்கப்பட்டு கல்லால் அடித்து கொல்வதையும் , இன்னொருவர் வாளால் வெட்டி மரணதண்டனை நிறைவேற்றுவதையும் பார்த்து இருக்கேன் . இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும்போது பள்ளிவாசலிருந்து "பாங்கு" வாசிப்பதையும் அதன் பிறகே தண்டனை நிரவேற்றப்படுவதையும் பார்த்தேன்
                                                                                                                                                                                .                              இதை முதன் முதலில் பார்க்கும்போது என்னால் தூங்க முடியவில்லை !நான் அவர்களிடம் கேட்பது என்னவென்றால் " இஸ்லாம் மார்க்கத்தை தழுவாத, ஷரியத் அல்லது அரபு நாட்டின் சட்டம் தெரியாத மக்களுக்கு நீங்கள் பகிர்ந்த இந்த பகிர்வு பார்க்கும் என்ன மாதிரியான உணர்வு தோன்றும் என்பதை நீங்கள் ஊகித்தது உண்டா ? சரி இப்படிப்பட்ட பதிவுகள் பதிவு செய்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இஸ்லாமிய சட்டம் உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் புரிதலுக்கு சரியாக இருக்கலாம் ! மற்றவர்களுக்கு ? ஓரளவுக்கு புரிதல் கொண்ட என்னாலே அவற்றை தாங்க முடியவில்லை . ஏற்கனவே இஸ்லாமிய மக்கள் "விரோதிகள் "என்ற வெறி ஊட்டப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு இந்த பதிவு எப்படி இருக்கும் ?

                                  அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட கொடூரமான மரணதண்டனை நிறைவேற்றுவது அரபு நாடுகளுக்கு வேண்டுமானால் வழக்கமாக .... மரபாக , நெறியாக இருக்கலாம் இந்தியாவில் ? அங்கு நிறைவேற்றப்படும் தண்டனையை இங்கே மனதில் பதியும்படி பதிவிடுவது ஏன் ?
எங்கள் ஊரில் உள்ள பள்ளி வாசலின் பாங்கு சத்தம் கேட்டவுடன் மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சி என் மனத்திரையில் இன்றும் ஓடுகிறது ! இதற்கெல்லாம் உங்களைபோன்ற ஞானம் இல்லாதவர்களின் செயல்பாடு என்று என் மனதை சரிகட்ட முடியவில்லை !

                                                                     இஸ்லாத்தை தழுவிய மனிதநேயமிக்க நல்ல நண்பர்கள் இன்றும் என்னுடன் இருகிறார்கள் என்னை பொருத்தவரை மதங்களைவிடவும் ,மனிதர்களை நேசிப்பவன் நான் . யாரும் உங்களிடம் சொல்ல தயங்கி இருப்பார்கள் ,இல்லையென்றால் கண்மூடித்தனமாக உங்கள் செயல்பாட்டை....,இஸ்லாத்தை..... தூற்றி இருப்பார்கள் !

                                  எல்லா மதங்களிலும் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அதில் வித்தியாசம் இருக்கலாம் . நோன்புக்கென்று ஒரு மாதத்தை ஒதுக்கி " இறைவன் மட்டுமே பெரியவன் " அவன் இம்மைக்கும் மறுமைக்கும் "வழி காட்டுபவன் என்று விரதம் இருக்கும் இந்த நாட்களிலா ..... இப்படிப்பட்ட செய்திகள் ....... ? இப்படிப்பட்ட பகிர்வுகளை பதிவிடும் நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன் ! தவறு இருப்பின் பெரும்தகையாய் மன்னிக்கவும் ....