Sunday 20 January 2019

கொடுங்கோலர்கள்,...!


சமீபத்தில் என் நெஞ்சை உலுக்கிய , பதற வைத்த ஒரு கொடுமையான நிகழ்வை என்னால் மறக்க முடியவில்லை.

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினர் மணமுறிவு காரணமாக பிரிந்து போக நேரிட்டது.

அவர்கள் காதலித்த போது அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரியது அப்படி போராட்டம் நடத்தி திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதியினர் மனம்  முறிவு காரணமாக பிரிந்து போகக் கூடிய சூழல் ஏற்பட்டது .

அவர்களின் இரண்டு  சின்னஞ்சிறு குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்ற போராட்டம்  வேறு தொடர்ந்து கொண்டிருந்தது.

முடிவாய் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு தாயோடு அந்தக்
குழந்தைகள் செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அப்பாவும் , அம்மாவும் உரக்கப் பேசிக் கொண்டிருந்தபோது
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழந்தைகள் அலறிக்கொண்டிருந்தார்கள்

பிரிந்து போகிறவரை அம்மாவின் பக்கமும் பின் அப்பாவின் பக்கமும் அந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தன.

ஒரு குழந்தையை தோளில் சுமந்து கொண்டு அடுத்த குழந்தையை தரதரவென இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்த தாயிடம் இருந்து விடுபட முடியாமல் அப்பாவை பார்த்தபடியே அலறி அழுதபடியே போய்க் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அன்பை முறித்த இந்த கொடுங்கோலர்களை பார்த்துக்கொண்டிருந்த என் நெஞ்சம் பதபதைத்துக்
கொண்டிருந்தது..

 இவர்களுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது இந்த கொடுமையை யாரும் பேசுவதற்கு தயாராக இல்லையே ? என்ற கையறு நிலை கண்டு கொதித்துப்போனேன்.

கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரை துடைக்க வேண்டுமென்ற
பிரஞ்சையற்று போனேன்.