Thursday 28 February 2019

பகடைக்காய் அல்ல ராணுவம்..

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே..!

இந்திய ராணுவத்திற்கும்,  எல்லை பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்டிருக்கின்ற இந்த பாதிப்பு  கண்டிக்கத்தக்கது .

காஷ்மீர் புல்வாமா தாக்குதலால் பாதுகாப்பு படைக்கு  இப்படி
ஒரு மோசமான நிலைமை ஏற்படுவதற்கு யார் பொறுப்பேற்பது..? செத்துப்போனவர்களையே பொறுப்பாளியாக்கலாமா..?

இந்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். புலனாய்வுத்துறை பொறுப்பேற்க வேண்டும்
இப்படி ஒரு மோசமான நிலைமையில் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்று இந்திய நாட்டு ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்.

ரூபாய் நோட்டை மாற்றுவதன் மூலம் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சொன்ன மோடி இப்போது வந்திருக்கிற தீவிரவாதம் எங்கிருந்து வந்தது?
என்று சொல்ல முடியுமா  இன்னும் ஏன் தீவிரவாதம்  ஒழியவில்லை என்பதை
விளக்க முடியுமா..?

எதற்கெடுத்தாலும் நாடு முன்னேறி இருக்கிறது வல்லரசாக மாறி இருக்கிறது மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் .உலகின் பாதுகாப்பான ராணுவம் இந்திய ராணுவம்தான் என்று மோடி அடித்துவந்த தம்பட்டம்  எவ்வளவு பலவீனமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட பலகீனத்தை நமது ஆட்சியாளர்கள் வைத்துக் கொண்டு எதிரியை மட்டும் குறை சொல்வது,  எதிரியை மட்டும் குற்றவாளியாக பார்ப்பது ஆட்சியாளர்களின் இயலாமை வெளிப்படுகிறது .

வீட்டை திறந்து போட்டுவிட்டு திருடன் மீது மட்டுமே குற்றம் சொல்வது போல இருக்கிறது.

தேசப்பற்றின் மீதும் ராணுவ வீரர்களின் தியாகத்தின் மீதும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை  ஆனால் ஆட்சியாளர்களின் தோல்வியால் புலனாய்வுத்துறையின் தோல்வியால் நமது ராணுவ வீரர்களுடைய தியாகம் வீணடிக்கப்பட்டு
அரசியலுக்காக பலிகடாவாக
ஆக்கப்பட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் போர் தொடுக்க வேண்டும் !....போர் நடத்த வேண்டும் ....! பதிலடி கொடுக்க வேண்டும்... என்று சிலர் பேசுவது விபரம் தெரிந்த பேச்சாக எடுத்துக்கொள்ள முடியவில்லை சிறுபிள்ளைத்தனமானது. 

இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை முன்கூட்டியே அறிவித்து இருக்கிறது அதோடு எல்லை பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு செல்வதற்கு  விமானத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் பலமுறை அனுமதி கேட்டு இருக்கிறார்கள்  ஏன் அனுமதி கொடுக்கப்படப்வில்லை ?

அதோடு பத்து நாட்கள் எல்லை பாதுகாப்பு படையினரை , ராணுவத்தினரை ஒரே இடத்தில் குவித்து வைத்து ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அழைத்து சென்றது ஏன் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் இன்று வரை கிடைக்கவில்லை .

ஆகவே ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலாக்கி அதன் மூலம்  லாபம் தேடும் மோடியின் நரித்தனத்தை தேசபக்தியோடு இணைத்துப் பார்க்க மூடக்கூடாது .

அதோடு போர் சம்பந்தமாக பாமரனுக்கும்,படித்தவருக்கும்  கூட  ஒரு புரிதல் வேண்டும் .

சின்ன நாடு பெரிய நாடு என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் அணு ஆயுதங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

போரின் ஆறாத காயங்களாக மறையாத தழும்பாக...
கடந்தகால சோமாலியாவில் , இஸ்ரேலில் , துருக்கியில்,  ஈராக்கில் ,  ஆப்கானிஸ்தானில்
இதோ பக்கத்தில் இருக்கிற இலங்கை  முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவில் நிற்கிறது.

ராணுவ டாங்குகளின் வெடி சப்தத்தால் குழந்தைகளும் முதியவர்களும் செத்துப் போவார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

 அதோடு பாதிப்பு என்றால் எதிரிக்கு மட்டுமல்ல நமக்கும் என்பதை நினைடுத்திக்கொள்ள
வேண்டும்.

போர் என்று வந்து விட்டால் பதுக்கல் பேர்வழிகள் எல்லா பொருட்களையும் பதுக்கி விடுவார்கள் அதனால் 200 மடங்கு விலைவாசி உயரும்.

போர் என்பது இரு நாடுகளின் வீரம் சம்பந்தப்பட்டதோ தன்மானம்  சம்பந்தப்பட்டதோ அல்ல..!

இரு நாடுகளின்ஒற்றுமை சம்பந்தப்பட்டது உயிர்கள் சம்பந்தப்பட்டது .அந்த நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது இருநாடுகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.


நேசம் என்பது மண்ணல்ல
தேசம் என்பது மக்களே..!
என்று சொன்னான் ஈழத்துப் போராளி தோழர்.பத்மநாபா
அது வார்த்தையல்ல பொய்யாமொழி.