Friday 6 September 2019

சிதைக்கப்படுகிறதா...?

சிதைக்கப்படுகிறதா...?
கம்யூனிஸ்டுகளின்
ஜனநாயக மத்தியத்துவ
கோட்பாடு...

இந்த கேள்வியை இடதுசாரி
இளைஞர்கள் சமூக வலைதளத்தில் கேட்டுக்கொண்டே
இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ‌சரியான
வழிகாட்டுதலும்
திட்டமிடலும் இல்லையென்றால்
தோழர்களின் தியாகம் வீணடிக்கப்படும்.
இல்லையென்றால்
சந்தர்ப்பவாதிகள்
பயன்படுத்திக்கொள்வார்கள்.

இவைகள் எல்லா
காலத்திலும்
எல்லா
இடங்களிலும்
நடந்து கொண்டே
இருக்கிறது.

உலகமயத்தால்
இன்னும் படுமோசமாகி
போனது. அது இடதுசாரி இயக்கத்தையும்
விட்டு வைக்கவில்லை.
அதனால்
அன்னிய வர்க்க சித்தாந்தம்
வேகமாக ஊடுருவி விட்டன.

யாரும் தியாகம் செய்ய
தயாராகவில்லை.
எல்லோரும் தலைவராகவே
ஆசைப்படுகிறார்கள்.
அதனால்...
பதவி சண்டை ,
சாதிய கண்ணோட்டம்,
கோஷ்டி போக்கு,
பாராளுமன்ற
சந்தர்ப்பவாதம்.
என நீண்டு போனதால்...?
இடதுசாரி இயக்கத்தில் மாபெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்த
போராட்டத்தை
இடதுசாரி இயக்கங்கள் நடத்திக்
கொண்டு இருக்கிறது.

இன்னும்
குறிப்பாக சொல்லப் போனால்...
இடதுசாரி இயக்கங்கள்
வளர முடியாத இன்றைய சூழலில்
அதை எதிர்த்த போராட்டத்தை இன்றைய இளைஞர்கள்
நடத்திக்கொண்டே
இருப்பதால் தான் வேகமாக வளர முடியாவிட்டாலும்...
அழிந்து போகாமல்
இன்னும் இருக்கிறது.

அதற்கு மேலும் வலுசேர்க்கும்
வேலையை சமூக வலைதளம்
செய்து கொண்டு
இருக்கிறது. அதனால் தான்
ஜனநாயக மத்தியத்துவ
கோட்பாடு சிதைந்த போகாமல்
மாபெரும் விவாதங்களை
நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

Wednesday 12 June 2019

முட்டாள்தனமாக ...திருமாவளவன்...!

#முட்டாள்தனமாக #பேசுகிறாரா #திருமாவளவன்...?

நாடு தழுவிய விவாதமாக சமூக வலைதளம் பற்றி விவாதம் எழுந்துள்ளது. அதில் பதிவு செய்வோரை தண்டிக்கப்படுவதும் சமூக வலைதளத்தின் சுதந்திரத்தை பறிக்க வேண்டும் என்பதை பற்றியும் மத்திய அரசு
விவாதித்து வருகிறது.

 சமூகவலைதளத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ்ஸின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதன் வழியில் உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து
வருவது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் அதே குரல் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களிடமிருந்தும் வருவதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆகவேதான் முட்டாள்தனமாக திருமாவளவன் அவர்கள் சிந்திக்கிறாறோ ? என்ற ஐயம் எழுகிறது.

 கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் அடுத்த குறவன் குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ராதிகாவின்
படத்தை பிரேம்குமார் என்பவர் ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் வெளியிட்ட தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதைக் கேள்விப்பட்ட அவருடைய மாமன் மகன் விக்னேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் என்பவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

இந்த செய்தியை கண்டித்து அறிக்கை விட்ட திருமாவளவன் அவர்கள் சமூக வலைதளத்தின் மீது மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க
சட்டம் கொண்டு  வேண்டும் என்று சொல்வதோடு , நிற்காமல் அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகள் போல சமூகவலைதளத்தில் தவறு செய்பவர் மீது விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது ஒரு முட்டாள் தனமான சிந்தனையாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறது.

 தொடர்ந்து பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பு சமூக வலைதளத்தை முடக்குவதும் அதற்கான செயலில் ஈடுபட்டு வருவதும் நாடு அறிந்ததே..

கடந்த காலத்தில் பால்தாக்கரே சம்பந்தமான சமூகவலைதள பதிவுக்கு கைது நடவடிக்கையை மேற்கொண்ட போது அதை உச்சநீதிமன்றம் தலையிட்டு தடுத்து நிறுத்தி இருப்பதை மறந்திருக்க முடியாது.

உத்திரப்பிரதேச முதலமைச்சர்
#ஆதித்யநாத்தை பத்திரிக்கையாளர்கள் சந்திக்கும்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் யோகியை பார்த்து "தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..? "என்று கேட்பது போன்ற ஒரு வீடியோவை டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்
#பிரசாந்த்கனோஜியா சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
முதல்வர் யோகிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக
கனோஜியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியில் அவருடைய வீட்டில் இருந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உத்திர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் அமலாகும்அதே பின்னணியில் திருமாவளவனும் பேசுவது சுதந்திரத்திற்கு பேச்சுரிமைக்கு எதிரானது.

காங்கிரஸ் கட்சி தலைவர் #ராகுல்காந்தி அவர்கள் "என்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வரை சிறையில் அடைப்பதாக இருந்தால் பல நாளிதழ்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும். உத்தரபிரதேச முதல்வர் முட்டாள்தனமாக செயல்படுகிறார்" என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதை விசாரணை செய்த நீதிபதி இந்திரா பானர்ஜி அஜய் ரஸ்தோகி அடங்கிய உச்ச நீதிமன்ற
அமர்வு வழங்கியிருக்கின்ற உத்தரவு பெரிதும் உற்று நோக்கி கவனிக்க வேண்டியது.

"சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது அதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் #பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதே நேரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சுதந்திரம் என்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் " அவர்கள் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

 இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் திருமாவளவன் அவர்கள் தங்களுடைய பேச்சில் பொறுப்பற்ற தனமாகவும் சுதந்திரத்திற்கு எதிராகவும் பேச்சுரிமைக்கு எதிராகவும் மூர்க்கத்தனமான முட்டாள்தனமாக பேசி இருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது.

 கடலூரில் ஏற்பட்டிருக்கின்ற அந்த பாதிப்பு உண்மையிலேயே வருந்தத்தக்கது இனி நடக்க கூடாது அதற்காக பேச்சுரிமையை எழுத்துரிமையை கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் திருமாவளவன் பேசுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல...!

 அதே நேரத்தில் அவர் குறிப்பிடும் அரபு நாடுகள் உடைய தண்டனை இங்கு வேண்டும் என்பதும் மீண்டும் காட்டுமிராண்டிகள் காலத்திற்கு இழுத்து செல்வதை திருமாவளவன் அவர்கள் ஏற்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது.

உத்தரபிரதேச நிகழ்வும் கடலூர் நிகழ்வும் சமூகவலைதளம் சம்பந்தமாக எழுந்துள்ள சர்ச்சையாக இருந்தாலும் அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் ஜனநாயக உரிமை எழுத்துரிமை பேச்சுரிமை பாதிக்கப்படாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
என்பதையே யோசிக்க வேண்டும் .

இன்றைக்கு இருக்கின்ற இந்திய தண்டனைச் சட்டம் போதுமானது அதைப் பயன்படுத்தியே சமூக வலைதள குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதையும் திருமாவளவன் அவர்கள் நம்ப வேண்டும்.

திருமாவளவன் அவர்கள் மதுரை மாவட்டம் #சந்தையூரில்அருந்ததிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் பற்றியும் எழுப்பப்பட்ட அவமான சுவர் பற்றியும் ஒரே ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
என்ற வகையில் கருத்து சொல்வதில் எந்த வித சமரசமும் கூடாது ஆனால் #ராஜாவைமிஞ்சிய #விசுவாசியை போல அவருடைய அறிக்கை அர்த்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய பேச்சில் எதிர்காலம் பற்றி சிந்தித்து பேசவேண்டும்.

 "#யாகாவராயினும்நா #காக்க வேண்டும்" என்பதே தமிழ் பொதுமறை.





Sunday 2 June 2019

மாடுகளை கட்டி போடுங்கள்...!

அடியேய் ...!
பெண்ணே...

உன் மூடிய மார்பகத்தை துப்பட்டாவைப் போட்டு இன்னும் மூடிக்கொள்...! என்று சொல்லும் வன்மம் உனக்கு புரியவில்லையா...?

பெண்கள் மட்டுமே மூடிக்கொள்ள வேண்டும்
ஆபாசத்தை பாதுகாக்க...

எப்பொழுதும் மூடப்படாத ஆண்களின் மேனி ஆபாசத்தை தடுத்துவிடுமோ...?

கற்பு பற்றி பேச வந்தால் அஃது இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்..! என்றான் பாரதி.

கடிவாளமற்ற ஆண்களின் குரூர பார்வையை செருப்பால் அடித்து முடக்கிப்போடாமல் ...
சின்ன துப்பட்டா எதை மறைத்து விடும்...?
எப்படி தடுத்துவிடும்...?

அழகும் , ஆபாசமும்
பார்வையில் இருக்கிறது..!
எல்லாமே ஆணுக்கானது என்ற ஆணாதிக்க சிந்தனையில் இருக்கிறது

வேலி தாண்டி மேயாமல் இருக்க மாடுகளை கட்டி போடுங்கள்...!
பயிர்கள் பாதுகாப்பாய் இருக்கும்...! என்று துணிந்து சொல் .
... மணிவண்ணன் மணி...

Tuesday 12 March 2019

தலைகுனியட்டும் பொள்ளாச்சி...!


பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றி கேள்விப்பட்டதும் நெஞ்சம் பதைபதைக்கிறது.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.
கடுமையான விமர்சனத்தையும்
கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில செய்தி ஊடகங்களில்
மட்டுமே செய்தியாக வந்துள்ளது அச்சு ஊடகங்களில் பெரும்பாலும் சின்னஞ்சிறு செய்தியாகவே போடப்பட்டு
மறைக்கப்பட்டுவிட்டது.

சமூகவலைதளங்களில் இந்தக் கொடுமைக்கு ஆதரவாக
அரசியல் , சாதிய , அதிகார பலத்தால் பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் எதிர்த்தாக்குதலும் தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

 பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் அயோக்கியத்தனம் ஆணாதிக்கத்தால் திட்டமிட்டு பரப்பிவிடப்படுகிறது .

ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அதில் சம்பந்தப்பட்ட இருவருக்குமே பொறுப்பு என்கின்ற வகையில் நியாயம் பேசுவது போல பேசுவதும் ,  அவனுங்க கூப்பிட்டால் இவளுக ஏன் போக வேண்டும்...? என்று சொல்வதும் மிகவும்
படுமோசமான கீழ்த்தரமானது.

பெண்கள் மீது திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தப்பித்த விடுவதற்கும் அவர்கள் செய்த அயோக்கியத்தனத்திற்கு வக்காலத்து வாங்குவதும் படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் .

பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழும் போதெல்லாம் இப்படிப்பட்ட கேவலமான எதிர்க் கருத்துகள் வந்து கொண்டே தான்
இருக்கின்றன.

பெண்ணை மேலும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிரட்டுவதற்கும் பெண்கள் என்றால் சுதந்திரமாக வெளியே போகக் கூடாது  அப்படி மீறி எதற்காகவும் போனால்   ஆணாதிக்கத்தால் நடத்தப்படும் வன்முறைகள் தவிர்க்க முடியாது என்று சொல்வதும் மீறினால் இப்படிப்பட்ட கடும் விளைவுகள் தான் வரும் என்று சொல்லாமல் சொல்வதும் மிரட்டுவதும் ஆகும்.

திட்டம் போட்டு ஒருவரைக் கொல்வது என்றால் நிச்சயமாக கொன்றுவிடலாம் அப்படித்தான் இந்த காட்டுமிராண்டிக் கூட்டம் பெண்களை குறி வைத்து அவர்களை ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றி தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது .அவர்களைக் கண்டிக்க வேண்டும் தண்டிக்க வேண்டுமேயொழிய இதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை . அவர்கள் உடல் மீது நடைபெற்ற தாக்குதல் பெண் சமூகத்தின் மீது நடத்திய தாக்குதலாகவே அவர்கள் கருதவேண்டும் . உடல் மட்டுமே பெண் சமூகத்தை
தீர்மானிப்பதல்ல... ! இந்த கொடும் தாக்குதல் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது அதையும் மீறி பெண் சமூகம் போராடி தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது.

அடுப்பு ஊதிய பெண் படிக்க வந்திருக்கிறாள். படிக்க வந்த பெண் வீதியில் நிமிர்ந்து நடந்திருக்கிறாள். வீதியில் நடந்த பெண் வேலை செய்து கொண்டிருக்கிறாள். வேலை செய்கின்ற பெண் இன்று தன்னை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறாள்.

ஆணாதிக்க சமூகம்
பெண்ணுடல் மீது புனிதத்தையும் , கற்பு நிலை போற்றுதலும் செய்து வருவது அவர்களை ஒரு எல்லை கோட்டை தாண்டாமல் தடுத்து நிறுத்துவதற்கும் ,மீறும் பட்சத்தில்  பெண்ணுடல்
மீது கடுமையான தண்டனை நிறைவேற்றி மிரட்டிவருகிறது.

இவர்களெல்லாம் எங்கோ யாருக்கோ யார் வீட்டுப் பெண்ணுக்கோ நடந்ததாக ஆண்கள் நினைத்து
விடக்கூடாது. நாளை நமக்கும் நம்முடைய குழந்தைக்கும் இவைகள் எல்லாமே நடந்தேறும் ஆகவே பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக , பெண்விடுதலைக்கு ஆதரவாக ஆண்களும் கைகோர்க்க வேண்டும்.

தண்டனைச் சட்டங்களை மட்டுமே பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்திட முடியாது. அதுவும் ஒரு தடுப்புச் சுவராக இருக்கலாம்.

பாலியல் வன்கொடுமையை தாங்க முடியாமல் இனியும் கணவனிடம் சேர்ந்து வாழ முடியாது என்ற சூழலில் வரும் போது கணவனையே அழித்தொழிக்க கூடிய பெண்கள் விதிவிலக்காக அங்கொன்று இங்கொன்றுமாக தென்படுகிறார்கள். அவர்கள் நினைத்தால் ஆண் சமூகத்தை கருவிலேயே மண்ணிற்கு வராமலே அழித்து ஒழித்து
விடுவார்கள் என்பதை ஆணாதிக்க சமூகம்
 நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆகவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் அதுவரை மக்கள் ஜனநாயகப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

இனி வரும் காலங்களில் பெண் குழந்தைகளை போராளியாகவும் ஆண் குழந்தைகளை சமத்துவ பார்வையோடும் வளர்த்தெடுக்க  சமூகம் உறுதி எடுத்துக்கொள்ள
வேண்டும்.





Sunday 3 March 2019

ஆர் எஸ் எஸ் அஜண்டா ...!

மோடியின் போர் நாடகம்
தற்காலிக தோல்வியே...!

பாகிஸ்தான் போர் நாடகம்
அப்பட்டமாக அரசியலாக்க
முடியாமல் போனதால் மோடியால் தாங்கிக்கொள்ள முடியாமல் தகித்துக்கொண்டு
இருக்கிறார்.

அதன் வெளிப்பாடு தான்
குமரியில் கொந்தளித்து
எதிர் கட்சிகள் இந்திய இராணுவத்தை சந்தேகிக்கிறார்கள் என்று
ஆவர்த்தனம் செய்தார்.

இந்திய ராணுவத்தை
ராணுவ வீரர்களின்
தியாகத்தை தேர்தலுக்கு
பயன்படுத்த திட்டம் போட்ட
மோடியைத்தான்
சந்தேகிக்கிறார்கள்.

இதில் மத அடிப்படையில்
ஆளும் பாகிஸ்தான்
பிரதமர்.இம்ரான் கான்
மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டார்.

இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு
மத வெறியை கிளப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் மோடியின் முகமூடி தான்
 இன்று   கிழிந்து போனது.

அதோடு...
பாகிஸ்தானில்தீவிரவாதிகள் இருக்கலாம்  மறுப்பதற்கில்லை.

அந்த நாடே தீவிரவாதிகளின் நாடா...? இல்லை..மதவாதிகள் நாடா...? இரண்டுமில்லை...!

பாகிஸ்தானில் எந்த மாகாணத்தில் முஸ்லிம் இமாம்
ஆள்கிறார்...?
இந்தியாவில் உ.பியில்
மத சன்நியாசி ஆளகிறார்.

பாகிஸ்தான் 100% நல்ல நாடு என்று சர்ட்டிபிகேட்
கொடுக்கவில்லை.
இந்தியா 100% நல்ல நாடு என்றோ...?
ஆளும் மோடியின்
ஆர் எஸ் எஸ் கும்பல்
நல்லவர்கள் என்றோ சர்ட்டிபிகேட் கொடுக்க
முடியுமா...?

பாகிஸ்தான் தீவிரவாதம்
என்று பேசுவதும் ,
பிரச்சாரம் செயவதும் ,
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை
பயங்கரவாதிகளாக
சித்தரிக்க...

இஸ்லாமிய மக்களை
வந்தேறிகள் என்று
அவதூறு பொழிய...

இரண்டாம் குடிமக்களாக மாற்ற நடத்தும் ஆர் எஸ் எஸ்ஸின்
அய்யோக்கியத்தனம்.

போர் வெறியை தூண்டி
வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் எப்படியாவது
வெற்றி பெற நடந்த அவர்களின் முயற்சி தற்காலிகமாக
தோல்வி அடைந்துள்ளது.

அடுத்த அஜண்டா ராமருக்கு கோவில் கட்டப்போகிறோம்
என்று சொல்லி கலவரத்தை
ஏற்படுத்தலாம்.

அதையும் மதச்சார்பற்ற
இந்தியா எதிர்கொள்ளும்.
ஏனென்றால்...?
தேசம் என்பது மண்ணல்ல
தேசம் என்பது மக்களே.....!

Thursday 28 February 2019

பகடைக்காய் அல்ல ராணுவம்..

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே..!

இந்திய ராணுவத்திற்கும்,  எல்லை பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்டிருக்கின்ற இந்த பாதிப்பு  கண்டிக்கத்தக்கது .

காஷ்மீர் புல்வாமா தாக்குதலால் பாதுகாப்பு படைக்கு  இப்படி
ஒரு மோசமான நிலைமை ஏற்படுவதற்கு யார் பொறுப்பேற்பது..? செத்துப்போனவர்களையே பொறுப்பாளியாக்கலாமா..?

இந்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். புலனாய்வுத்துறை பொறுப்பேற்க வேண்டும்
இப்படி ஒரு மோசமான நிலைமையில் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்று இந்திய நாட்டு ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்.

ரூபாய் நோட்டை மாற்றுவதன் மூலம் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சொன்ன மோடி இப்போது வந்திருக்கிற தீவிரவாதம் எங்கிருந்து வந்தது?
என்று சொல்ல முடியுமா  இன்னும் ஏன் தீவிரவாதம்  ஒழியவில்லை என்பதை
விளக்க முடியுமா..?

எதற்கெடுத்தாலும் நாடு முன்னேறி இருக்கிறது வல்லரசாக மாறி இருக்கிறது மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் .உலகின் பாதுகாப்பான ராணுவம் இந்திய ராணுவம்தான் என்று மோடி அடித்துவந்த தம்பட்டம்  எவ்வளவு பலவீனமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட பலகீனத்தை நமது ஆட்சியாளர்கள் வைத்துக் கொண்டு எதிரியை மட்டும் குறை சொல்வது,  எதிரியை மட்டும் குற்றவாளியாக பார்ப்பது ஆட்சியாளர்களின் இயலாமை வெளிப்படுகிறது .

வீட்டை திறந்து போட்டுவிட்டு திருடன் மீது மட்டுமே குற்றம் சொல்வது போல இருக்கிறது.

தேசப்பற்றின் மீதும் ராணுவ வீரர்களின் தியாகத்தின் மீதும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை  ஆனால் ஆட்சியாளர்களின் தோல்வியால் புலனாய்வுத்துறையின் தோல்வியால் நமது ராணுவ வீரர்களுடைய தியாகம் வீணடிக்கப்பட்டு
அரசியலுக்காக பலிகடாவாக
ஆக்கப்பட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் போர் தொடுக்க வேண்டும் !....போர் நடத்த வேண்டும் ....! பதிலடி கொடுக்க வேண்டும்... என்று சிலர் பேசுவது விபரம் தெரிந்த பேச்சாக எடுத்துக்கொள்ள முடியவில்லை சிறுபிள்ளைத்தனமானது. 

இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை முன்கூட்டியே அறிவித்து இருக்கிறது அதோடு எல்லை பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு செல்வதற்கு  விமானத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் பலமுறை அனுமதி கேட்டு இருக்கிறார்கள்  ஏன் அனுமதி கொடுக்கப்படப்வில்லை ?

அதோடு பத்து நாட்கள் எல்லை பாதுகாப்பு படையினரை , ராணுவத்தினரை ஒரே இடத்தில் குவித்து வைத்து ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அழைத்து சென்றது ஏன் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் இன்று வரை கிடைக்கவில்லை .

ஆகவே ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலாக்கி அதன் மூலம்  லாபம் தேடும் மோடியின் நரித்தனத்தை தேசபக்தியோடு இணைத்துப் பார்க்க மூடக்கூடாது .

அதோடு போர் சம்பந்தமாக பாமரனுக்கும்,படித்தவருக்கும்  கூட  ஒரு புரிதல் வேண்டும் .

சின்ன நாடு பெரிய நாடு என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் அணு ஆயுதங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

போரின் ஆறாத காயங்களாக மறையாத தழும்பாக...
கடந்தகால சோமாலியாவில் , இஸ்ரேலில் , துருக்கியில்,  ஈராக்கில் ,  ஆப்கானிஸ்தானில்
இதோ பக்கத்தில் இருக்கிற இலங்கை  முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவில் நிற்கிறது.

ராணுவ டாங்குகளின் வெடி சப்தத்தால் குழந்தைகளும் முதியவர்களும் செத்துப் போவார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

 அதோடு பாதிப்பு என்றால் எதிரிக்கு மட்டுமல்ல நமக்கும் என்பதை நினைடுத்திக்கொள்ள
வேண்டும்.

போர் என்று வந்து விட்டால் பதுக்கல் பேர்வழிகள் எல்லா பொருட்களையும் பதுக்கி விடுவார்கள் அதனால் 200 மடங்கு விலைவாசி உயரும்.

போர் என்பது இரு நாடுகளின் வீரம் சம்பந்தப்பட்டதோ தன்மானம்  சம்பந்தப்பட்டதோ அல்ல..!

இரு நாடுகளின்ஒற்றுமை சம்பந்தப்பட்டது உயிர்கள் சம்பந்தப்பட்டது .அந்த நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது இருநாடுகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.


நேசம் என்பது மண்ணல்ல
தேசம் என்பது மக்களே..!
என்று சொன்னான் ஈழத்துப் போராளி தோழர்.பத்மநாபா
அது வார்த்தையல்ல பொய்யாமொழி.

Sunday 20 January 2019

கொடுங்கோலர்கள்,...!


சமீபத்தில் என் நெஞ்சை உலுக்கிய , பதற வைத்த ஒரு கொடுமையான நிகழ்வை என்னால் மறக்க முடியவில்லை.

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினர் மணமுறிவு காரணமாக பிரிந்து போக நேரிட்டது.

அவர்கள் காதலித்த போது அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரியது அப்படி போராட்டம் நடத்தி திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதியினர் மனம்  முறிவு காரணமாக பிரிந்து போகக் கூடிய சூழல் ஏற்பட்டது .

அவர்களின் இரண்டு  சின்னஞ்சிறு குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்ற போராட்டம்  வேறு தொடர்ந்து கொண்டிருந்தது.

முடிவாய் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு தாயோடு அந்தக்
குழந்தைகள் செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அப்பாவும் , அம்மாவும் உரக்கப் பேசிக் கொண்டிருந்தபோது
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழந்தைகள் அலறிக்கொண்டிருந்தார்கள்

பிரிந்து போகிறவரை அம்மாவின் பக்கமும் பின் அப்பாவின் பக்கமும் அந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தன.

ஒரு குழந்தையை தோளில் சுமந்து கொண்டு அடுத்த குழந்தையை தரதரவென இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்த தாயிடம் இருந்து விடுபட முடியாமல் அப்பாவை பார்த்தபடியே அலறி அழுதபடியே போய்க் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அன்பை முறித்த இந்த கொடுங்கோலர்களை பார்த்துக்கொண்டிருந்த என் நெஞ்சம் பதபதைத்துக்
கொண்டிருந்தது..

 இவர்களுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது இந்த கொடுமையை யாரும் பேசுவதற்கு தயாராக இல்லையே ? என்ற கையறு நிலை கண்டு கொதித்துப்போனேன்.

கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரை துடைக்க வேண்டுமென்ற
பிரஞ்சையற்று போனேன்.